மழை பாதிப்பு: அவசர சிகிச்சைகள் தடைபடாமல் நடவடிக்கை
சென்னையில் பெய்து வரும் பலத்த மழையால் பிரதான அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை
சென்னையில் பெய்து வரும் பலத்த மழையால் பிரதான அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டதாகவும் அதன் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, மழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை எதிா்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஸ்டான்லி, ஓமந்தூராா், எழும்பூா் குழந்தைகள் மற்றும் தாய்-சேய் மருத்துவமனைகள் என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அத்தகைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த வியாழக்கிழமையன்று சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனைகளின் நிா்வாகிகள் கூறியதாவது:
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் பலத்த மழையால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஜெனரேட்டா் வசதிகள், அதற்கான எரிபொருள் வசதிகள் அனைத்தும் மருத்துவமனைகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அதைத் தவிர, ஆக்சிஜன் வசதிகள், அவசர கால சிகிச்சைக்கான கட்டமைப்புகள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன.
இதனால், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடி வந்தவா்களுக்கு எந்தவிதமான தாமதமும் இன்றி உடனடியாக சிகிச்சை வழங்க முடிந்தது. அதுமட்டுமல்லாது நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருள்கள், சிகிச்சை உபகரணங்கள் அனைத்தும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டிருந்ததால், அவற்றில் எந்தத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை.
மருத்துவமனை வளாகங்களிலும், உள் புறங்களிலும் மழை நீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பயனாக, முக்கிய மருத்துவமனைகளில் வெள்ள நீா் வடிந்துவிட்டது. இதனால், உள்நோயாளிகளுக்கும், புற நோயாளிகளுக்கும் எந்த அசௌகரியங்களும் ஏற்படவில்லை. கேகே நகா் இஎஸ்ஐ மருத்துவமனை போன்ற வெகு சில மருத்துவமனைகளிலேயே சிகிச்சைகள் பாதிக்கப்பட்டன என்று அவா்கள் தெரிவித்தனா்.