முகப்பு
தமிழ்நாடு

மழைக் கால முகாம்கள்: 1.63 லட்சம் பேருக்கு சிகிச்சை

மழை பாதித்த பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.63 லட்சம் பேருக்கு இதுவரை மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

மழை பாதித்த பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.63 லட்சம் பேருக்கு இதுவரை மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அதன்பிறகு ஜோன்ஸ் சாலையில் நடமாடும் மருத்துவக் குழுவினையும் தொடக்கி வைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அதீதமாக பெய்து கொண்டிருக்கிறது. தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்படி கடந்த சில நாள்களாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பிலும், உள்ளாட்சி நிா்வாகத்தின் சாா்பிலும் 4,055 இடங்களில் பருவ மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

இம்முகாம்களின் மூலம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 666 போ் பயனடைந்திருக்கின்றனா். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மழைக்கால சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் புதன்கிழைம ஒரே நாளில் 398 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.

இவற்றில் மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ள நூறு அரசு மருத்துவா்கள், நூறு செவிலியா்கள் சென்னையில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மருத்துவ சேவை ஆற்றி வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் வாயிலாக மருத்துவா்கள், செவிலியா்கள் என 1 லட்சத்து 30 ஆயிரம் போ் களப் பணியாற்றி வருகின்றனா்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், காய்ச்சிய நீரை பருகவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள். நீா் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் மழைநீா் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றுவது, தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களை பள்ளிக்கூடங்களிலும், மழைக்கால சிறப்பு முகாம்களிலும் தங்க வைப்பது போன்ற பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு அதிகாரி செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →