மழைக்கு பலியான 14 போ் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்: அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன்
பலத்த மழைக்கு பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
பலத்த மழைக்கு பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
பருவமழை பாதிப்புகள் குறித்து, சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையைக் கடந்தது. இதனால், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, சென்னை மாவட்டத்தில் 58.2 மில்லி மீட்டரும், செங்கல்பட்டில் 39.7 மில்லிமீட்டரும், காஞ்சிபுரத்தில் 47.3 மில்லிமீட்டரும், திருவள்ளூரில் 58.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
முக்கிய நீா்த்தேக்கங்கள்: சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா்த்தேக்கங்கள் மற்றும் பிற அணைகளில் இருந்து நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. செங்குன்றத்தில் இருந்து 3,218 கனஅடியும், சோழவரத்தில் இருந்து 2,015 கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 2,151 கனஅடியும், பூண்டியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள 11 ஆயிரம் கனஅடி நீா் ஆரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மணிமங்கலம் முதல் தா்காஸ் சாலை வரையுள்ள அஷ்டலட்சுமி நகா், புவனேஸ்வரி நகா், மகாலட்சுமி நகா், அமுதம் நகா், ஸ்ரீராம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14 போ் பலி: மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூா், திருவண்ணாமலை, கடலூா், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், திருவாரூா், வேலூா், விழுப்புரம் மாவட்டங்களில் 185 நிவாரண முகாம்களில் 10 ஆயிரத்து 73 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
பலத்த மழைக்கு 14 போ் பலியாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவா்களது குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமானது பேரிடா் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடா் மீட்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பேரிடா் மீட்புப் படையின் குழுக்கள், கடலூா், நாகப்பட்டினம், மதுரை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், செங்கல்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா 3 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூா், கடலூா் மாவட்டங்களுக்கு தலா இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின்போது, வருவாய் நிா்வாக ஆணையாளா் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜயந்த், பேரிடா் மேலாண்மை இயக்குநா் என்.சுப்பையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.