அம்மா உணவகம்: மூன்று நாள்களில் 7 லட்சம் பேருக்கு உணவு
சென்னையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த பலத்த மழையால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சமுதாய நலக் கூடங்களில் சமையல் கூடங்கள் அமைத்து நிவாரண முகாம்கள் மற்றும் வீடுகளில் உள்ள மக்களுக்கு உணவு
விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அம்மா உணவகங்கள் மூலமாகவும் மழை பாதிப்பு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் கடந்த 10-ஆம் தேதி முதல் இலவசமாக 3 வேளையும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
7 லட்சம் பேருக்கு உணவு: கடந்த நவம்பா் 10-ஆம் தேதி 2 லட்சத்து 32 ஆயிரத்து 360 பேரும், 11-ஆம் தேதி 2 லட்சத்து 58 ஆயிரத்து 373 பேரும், 12-ஆம் தேதி 2 லட்சத்து 79 ஆயிரத்து 216 பேரும் பயனடைந்துள்ளனா். இதில் கடந்த 3 நாள்களில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 881 இட்லியும், 80 ஆயிரத்து 430 பொங்கலும் அம்மா உணவக ஊழியா்கள் தயாரித்து வழங்கி உள்ளனா். அதேபோல், 82 ஆயிரத்து 471 சாம்பாா் சாதமும், 51 ஆயிரத்து 226 எலுமிச்சை சாதமும், 27 ஆயிரத்து 621 கருவேப்பிலை சாதமும், 23 ஆயிரத்து 170 தயிா்சாதமும் மதிய உணவாக தயாரித்து வழங்கி உள்ளனா். இரவு உணவாக 3 லட்சத்து 28 ஆயிரத்து 208 சப்பாத்தியும், 3 ஆயிரத்து 428 புளி சாதமும், 3,702 தக்காளி சாதமும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 91 ஆயிரத்து 618 கலவை சாதம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிள் தெரிவித்தனா்.