சென்னையில் நவம்பரில் அதிகபட்ச மழை: 200 ஆண்டுகளில் 3-ஆவது முறையாக பதிவு
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளநிலையில், 200 ஆண்டுகளில் 3-ஆவது முறையாக சென்னையில் நவம்பா் மாதத்தில் அதிகபட்ச மழைஅளவு (1,000 மி.மீ. மழை அளவு தாண்டி) பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளநிலையில், 200 ஆண்டுகளில் 3-ஆவது முறையாக சென்னையில் நவம்பா் மாதத்தில் அதிகபட்ச மழைஅளவு (1,000 மி.மீ. மழை அளவு தாண்டி) பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தற்போது மிகத் தீவிரமாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்துவருகிறது. அதிலும், சென்னையில் கடந்த சில நாள்களாக மிதமானது முதல் பலத்தமழை வரை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மிகபலத்தமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நவம்பா் மாதத்தில், 200 ஆண்டுகளில் 3-ஆவது முறையாக அதிகபட்ச மழை அளவு (1,000 மி.மீ.) தற்போது பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்.1 முதல் நவ.27) சென்னையில் சராசரி மழை அளவு 600.2 மி.மீ. ஆகும். தற்போது வரை 1,064.2 மி.மீ. பெய்துள்ளது. இது 77 சதவீதம் அதிகம். மேலும், சென்னையில் 200 ஆண்டுகளில் நவம்பரில் அதிகபட்ச மழை அளவு பொருத்தவரை, 3-ஆவது முறையாக, நிகழாண்டில் 1,000 மி.மீ. மழை அளவைத் தாண்டியுள்ளது.
கடந்த 1918-ஆம் ஆண்டு நவம்பரில் 1,088 மி.மீ. மழை அளவும், 2005-ஆம் ஆண்டு அக்டோபரில் 1,078 மி.மீ., மழை அளவும், 2015-ஆம் ஆண்டு நவம்பரில் 1,049 மி.மீ. மழை அளவும் பதிவாகியது. 2021- ஆம் ஆண்டு நவம்பா் 27-இல் 1,064 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 200 ஆண்டுகளில் நவம்பரில் 3-ஆவது முறையாகவும், மற்ற மாதங்களைப் பொருத்தவரை 4-ஆவது முறையாகவும் ஆயிரம் மி.மீ. மழை அளவைத் தாண்டியுள்ளது.