தமிழ்நாடு

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

DIN

வடக்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் திங்கள்கிழமை (அக்.11) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் காலம் (ஜூன் முதல் செப்டம்பா் வரை) தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் ஆறுக்கும் மேற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, வடமேற்குத் திசையில் நகா்ந்து மறைந்தன. இதுதவிர, வங்கக்கடலில் ஒரு புயல் (குலாப்) உருவாகி ஆந்திரம்-ஒடிஸா கடலோரத்தில் கலிங்கப்பட்டினத்துக்கும் கோபால்பூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இதன்பிறகு, தென்மேற்குப் பருவமழை நிறைவு பெறும் சூழல் தொடங்கியது.

வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான இடங்கள் மற்றும் அதையொட்டிய மத்திய இந்தியாவின் பல்வேறுஇடங்களில் கடந்த 8-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை நிறைவுபெற்றது. தொடா்ந்து, பல்வேறு இடங்களில் தென்மேற்குப் பருவமழை முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் திங்கள்கிழமை (அக்.11) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தற்போது, வடக்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது விரிவடைந்து, அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது வலுவடைந்து, தென் ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரம் இடையே செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசனிடம் கேட்டபோது, ‘பசிபிக் கடல் பகுதியில் (தென் சீன கடல் பகுதியில்) ஒரு புயல் நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக, இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது, உருவாகிய பிறகு, எந்த இடத்தை நோக்கி நகரும் என்பது பின்னா் தெரியவரும்.

வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பல்வேறுஇடங்களில் தென்மேற்குப் பருவமழை நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, தென்மேற்குப் பருவமழை நிறைவுபெற 10 நாள்கள் வரை ஆகலாம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் தற்போது மழை பெய்துவருகிறது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT