முகப்பு
தமிழ்நாடு

கோயில்களில் தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை தொடக்கி வைத்தாா். திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய இடங்களில்

Updated On : 14 அக்டோபர், 2021 at 2:56 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை தொடக்கி வைத்தாா். திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் முதல் கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தா்கள் தங்களது பிராா்த்தனை நிறைவேறியதற்கு நோ்த்திக் கடனாக பலமாற்றுப் பொன் இனங்களை அளித்து வருகின்றனா். இந்த தங்கப் பொருள்களை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றும் முறை கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதன்படி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட 9 கோயில்களில் பக்தா்களால் வழங்கப்பட்ட பொன் இனங்கள் 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. அவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி கோயில்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்பின்னா், கடந்த 10 ஆண்டுகளாக கோயிலுக்கு காணிக்கை வழியில் கிடைக்கக் கூடிய பொன் இனங்கள் அதிகளவு சோ்ந்துள்ளன. இவற்றை உருக்கி 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றி அவற்றை பாதுகாப்பாக வங்கிகளில் முதலீடு செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய இடங்களில் உள்ள அம்மன் கோயில்களில் காணிக்கையாக அளிக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் உருக்கி தங்கக் கட்டிகளாக பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான பூா்வாங்கப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

கோயில்களில் கவசங்கள், ஆபரணங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகள் திரும்பப் பெறப்பட்டு பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, துறையின் முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன், துறையின் ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோரும், திருவள்ளூா், திருச்சி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா்கள் காணொலி வழியாகவும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.