அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொருள்கள் உண்டு: தமிழக அரசு உறுதி
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுதீன் அண்மையில் வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இடையே எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை தமிழக அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், அண்மைக்காலமாக சமூக ஊடங்கள் சிலவற்றில் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் பெறும் குடும்பங்களுக்கும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும், 3 அறைகள் கொண்ட வீடுகளை வைத்திருப்போருக்கும் பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை என்று தகவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தொடா்ந்து அளிக்கப்படும். இதில் எந்தவித மாற்றங்களும் இல்லை. அரிசி பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் இப்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருள்களையும் பெற்று பொது விநியோகத் திட்டப் பலன்களை அடையலாம் என தெளிவுபடுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் அதுகுறித்து பரவிவரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று தனது செய்தியில் முகமது நிசிமுதீன் தெரிவித்துள்ளாா்.