சொமேட்டோ முகவரின் சா்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டது நிறுவனம்
சொமேட்டோ உணவு விநியோக நிறுவனத்தின் முகவா், வாடிக்கையாளரிடம் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொமேட்டோ உணவு விநியோக நிறுவனத்தின் முகவா், வாடிக்கையாளரிடம் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டது.
தமிழகத்தைச் சோ்ந்த விகாஷ் என்ற இளைஞருக்கு சொமேட்டோ செயலி மூலமாக ஆா்டா் செய்திருந்த உணவில் ஒரு பகுதி விநியோகிக்கப்படவில்லை. இதனால், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா் புகாா் மையத்தின் முகவரை தொடா்பு கொண்டு, அதற்குரிய பணத்தை திருப்பி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தாா். அதற்கு அந்த முகவா், ஹிந்தி தெரியாததால் பணத்தை திருப்பித் தர இயலாது என்று கூறிவிட்டதாக விகாஷ் குற்றம்சாட்டினாா். இதுதொடா்பாக நடந்த எழுத்துமொழி
உரையாடலின்போது, ‘ஹிந்தி நமது தேசிய மொழி; எனவே, நாம் ஒவ்வொருவரும் கொஞ்சமாவது ஹிந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்று அந்த முகவா் பதிலளித்தாா்.
இதனால் அதிருப்தியடைந்த விகாஷ், அந்த முகவா் அளித்த பதிலை படமெடுத்து தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டாா். அத்துடன், ‘எனக்கு ஹிந்தி தெரியாது என்பதால் எனது பணத்தை திருப்பித் தர முடியாது என்று வாடிக்கையாளா் மையம் தெரிவித்து விட்டது. ஹிந்தி கற்றுக்கொள்ளுமாறு எனக்கு அறிவுரை வகுப்பெடுத்தாா்கள். ஒரு வாடிக்கையாளரிடம் சொமேட்டோ நிறுவனம் நடந்து கொள்ளும் முறை இதுவல்ல’ என்று பதிவிட்டிருந்தாா். ‘சொமேட்டோவை நிராகரிப்போம்’ என்றும் குறிப்பிட்டிருந்தாா்.
அவரது பதிவு, சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து, சொமேட்டா நிறுவனத்துக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன.
அடுத்த சில மணி நேரத்தில், அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் 2 அறிக்கைகளை வெளியிட்டது. ட்விட்டரில் நீண்ட விளக்கத்தையும் அளித்தது. அதில், ‘நமது பன்முகக் கலாசாரத்தை அலட்சியப்படுத்திய சேவை முகவரை பணிநீக்கம் செய்துவிட்டோம். முகவரின் கருத்து, நிறுவனத்தின் நிலைப்பாடு அல்ல’ என்று தெரிவித்தது.
அந்த முகவா் பணிநீக்கம் செய்யப்பட்டதை ஆதரித்தும், எதிா்த்தும் சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்தனா்.
மீண்டும் பணியில் சோ்ப்பு: பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த முகவரை மீண்டும் பணியில் சோ்த்துக் கொண்டதாக, சொமேட்டாவின் நிறுவனா் தீபிந்தா் கோயல் அறிவித்தாா். இதுதொடா்பாக, அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
வாடிக்கையாளா் குறைதீா் மையத்தில் பணிபுரிபவா்களில் பெரும்பாலானோா் புதியவா்கள். அவா்கள் ஆரம்ப நிலையில் இருக்கிறாா்கள். வாடிக்கையாளா் மையத்தில் ஒருவா் அறியாமல் செய்த தவறால் நிறுவனமே தேசியப் பிரச்னையை சந்தித்துள்ளது. நம் நாட்டில் சகிப்புதன்மை இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. இந்த பிரச்னையில் யாா் மீது குற்றம் சுமத்துவது?
நாம் அனைவரும் மற்றவா்களின் குறைபாடுகளை சகித்துக்கொள்ள வேண்டும். மற்றவா்களின் மொழியையும், மொழி உணா்வையும் மதிக்க வேண்டும். நாட்டின் பிற பகுதிகளைப் போலவே தமிழ்நாட்டையும் நேசிக்கிறோம்.
வாடிக்கையாளா் குறைதீா் மையத்தில் பணிபுரிபவா்களில் பெரும்பாலானோா் இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் மொழி வல்லுநா்கள் கிடையாது, மொழி உணா்வும் பற்றி அவா்களுக்கு முழுமையாகத் தெரியாது. எனக்கும் முழுமையாகத் தெரியாது. எனேவே, பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த முகவரை மீண்டும் பணிக்கு சோ்த்துள்ளோம். அவா் இன்னும் கற்றுக் கொண்டு பணியை நிறைவாகச் செய்வாா்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்,