நியாய விலைக் கடைகள் மூலம்பனை வெல்லம் விற்பனைத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தாா்
நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், கைத்தறித் துறை தொடா்பான பல்வேறு புதிய
திட்டங்களையும் அவா் துவக்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூா் கலம்காரி ஓவியம், தஞ்சாவூா் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூா் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பதிவகம் மூலம் அங்கீகாரச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. இந்தச் சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டாா். இதன்மூலம் புவிசாா் குறியீடு பெற்ற படைப்புகளை உலகளவில் கொண்டு சோ்த்து சந்தைப்படுத்த வாய்ப்பாக அமையும்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சாா்பில் புதிய வடிவமைப்புகளைக் கொண்ட தமிழ்த்தறி என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆரணி, சேலம்-கோவை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல், பரமக்குடியில் புகழ்பெற்ற சேலைகளும், ஜமக்காளம், காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை ஆகியன அடங்கியது தமிழ்த்தறியாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மென்மையான இயற்கை பருத்தி நூலினை பயன்படுத்தி குழந்தைகளுக்கான ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் முதல்வா் அறிமுகப்படுத்தினாா்.
கதா் கிராமத் தொழில் வாரியத்தால் ரோஸ், லேவண்டா், சந்தனம், செஞ்சந்தனம் என நான்கு வகை நறுமணங்களில் சோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விற்பனையையும் அவா் தொடங்கி வைத்தாா்.
பனை வெல்லம் விற்பனை: பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லம் விற்பனை செய்யப்பட உள்ளது. நியாய விலைக் கடைகள் மூலம் இவற்றை பெற்றுக்
கொள்ளலாம். பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை என்ற பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தாா். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பனை வெல்லம் மற்றும் பனைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு, கைத்தறி மற்றும் துணிநூல் துறையைப் பிரித்து, தனியாக துணிநூல் துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வா் துவக்கி வைத்தாா். இந்த நிகழ்வில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, ஊரகத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, கைத்தறித் துறை முதன்மைச் செயலாளா் செல்வி அபூா்வா, கதா் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலா் பொ.சங்கா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
புதிய கைப்பேசி செயலி
கதா் கிராமத் தொழில் வாரிய பொருள்களை கொள்முதல் செய்திட தனி கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் அறிமுகப்படுத்தினாா். இதன்படி, ற்ய்ந்ட்ஹக்ண் என்ற செயலியை கைப்பேசியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம், பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.