6ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.10.2021) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினையொட்டி சென்னை, ஓக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகர் மற்றும் எழில் நகரில் கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக மக்கள் அனைவரையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் தீவிர கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டார்.
இதையும் படிக்க- 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்
அதன்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இதுவரை ஐந்து தீவிர கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை 5 கோடியே 43 இலட்சத்து 23 ஆயிரத்து 51 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று ஆறாவது முறையாக தீவிர கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது.
இன்று (23.10.2021) சென்னை, ஓக்கியம் துரைப்பாக்கம், எழில் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் கண்ணகி நகரில் உள்ள அரசு இ-சேவை மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து,
பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் பார்வையிட்டு, மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.