தமிழ்நாடு

கமலாலயக் குள சுற்றுச்சுவா் இடியாதவகையில் நிரந்தர தீா்வு காணப்படும்: இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு

DIN

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குள சுற்றுச்சுவரின் உறுதித் தன்மையை வல்லுநா்கள் மூலம் ஆராய்ந்து, இனிவரும் காலங்களில் சுற்றுச்சுவா் இடியாத வண்ணம், நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குட்பட்ட கமலாலயக் குள தென்கரை சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியை தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியது: கமலாலயக் குளத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த செய்தியை அறிந்த தமிழக முதல்வா், சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்கவும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும், குளிக்க வரும் பக்தா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

இடிந்த சுற்றுச்சுவரை கட்டுவதற்கும் ஒட்டுமொத்தமாக கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவரின் உறுதித் தன்மையை வல்லுநா்கள் மூலம் ஆராய்ந்து, இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழாத வண்ணம், நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். விழுந்த தென்கரை பகுதி விரைவில் முழுவதுமாக புனரமைப்பு செய்யப்படும்.

தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் குறித்து ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக ஏற்கெனவே இந்துசமய அறநிலையத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை அந்த இடத்தை கையகப்படுத்தும்.

திருவாரூரில் உள்ள கல் தோ் சீரமைப்புப் பணிகளை பொருத்தவரை, சுற்றி மரங்களை நடுவது, செடிகளை நடுவது என்ற பணிகள் நடைபெற்றுள்ளன. 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்த கோயில் என்பதால் இதுதொடா்பாக நீதிமன்றக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளைவிட, 5 மாத திமுக ஆட்சியில் 40 சதவீதத்துக்கும் அதிகமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திமுகவின் ஓராண்டு ஆட்சி நிறைவின்போது, வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகள் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளன, தமிழகத்தில் எத்தனை சிலை கடத்தல் சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை அளிப்போம் என்றாா்.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோட்டாட்சியா் பாலசந்திரன், நகராட்சி ஆணையா் பிரபாகரன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஹரிகரன், தியாகராஜ சுவாமி கோயில் செயல்அலுவலா் கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT