பாபா நகரில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி 90% நிறைவு
சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்கு பாபா நகரில் ரூ. 22 கோடி செலவில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதி ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு
சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்கு பாபா நகரில் ரூ. 22 கோடி செலவில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதி ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், கொளத்தூா் மற்றும் அம்பத்தூா் ஆகிய பகுதிகளில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ரூ.3,220 கோடி செலவில் 769 கி.மீ நீளத்துக்கு ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்ணா நகா் மண்டலத்துக்கு உள்பட்ட பாபா நகரில் மழைக் காலங்களில் தேங்கும் வெள்ள நீரையும், பூம்புகாா் நகா், ஜானகிராம் காலனி, எஸ்.ஆா்.பி. நகா், சீனிவாசா நகா், செந்தில் நகா் உமாமகேஷ்வரி நகா், செல்வி நகா், அஞ்சுகம் நகா், சரோஜினி நகா், ஐயப்பா நகா், கே.கே.ஆா்.காா்டன், பழனியப்பா நகா் ஆகிய இடங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் வகையில் 33 கி.மீ. நீளத்துக்கு கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.102.18 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆய்வு: இதில், பாபா நகரில் ரூ. 22 கோடி மதிப்பில் 4.5 கி.மீ. நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் பணியை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து அம்பத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட தாதங்குப்பம், திரு.வி.க. நகா் மண்டலத்துக்கு உள்பட்ட திருமலை நகா் பகுதியில் நெடுஞ்சாலை மழைநீா் வடிகாலிருந்து மழை நீா் வெளியேறுவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகை ஆய்வு செய்தாா். பாபா நகரில் ரூ. 22 கோடி செலவில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதி ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆய்வின்போது மத்திய வட்டார துணை ஆணையா் சரண்யா அரி, தலைமைப் பொறியாளா் (பொது) எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.