பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவி மாயம்; தீயணைப்புப் படையினர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம் அருகே கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவி மாயமடைந்தார். வரை கண்டுபிடித்துத் தர தீயணைப்புப் படையினர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம்: பல்லடம் அருகே கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவி மாயமடைந்தார். அவரை கண்டுபிடித்துத் தர தீயணைப்புப் படையினர் வராததால் கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் வளையபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் சுப்பிரமணி மகள் சகுந்தலாதேவி (14), தங்கமுத்து மகள் சுமதி, (13), தெய்வசிகாமணி மகள் யோகலட்சுமி, (14) ஆகியோர் நேற்று(சனிக்கிழமை) குளித்துக் கொண்டிருந்தபோது மூன்று பேரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது அங்கிருந்தவர்கள் சுமதி, யோகலட்சுமி இருவரையும் காப்பாற்றி மீட்டனர்.
சகுந்தலாதேவி தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேடிபார்த்தும் கிடைக்காததால் காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கும், பல்லடம் தீயணைப்புதுறையினருக்கும் தகவல் கொடுத்தின் பேரில் பல்லடம் தீயணைப்பு படையினர் பி.ஏ.பி.வாய்க்காலில் சகுந்தலாதேவியை தேடினர்.
இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடரலாம் என்று தெரிவித்துவிட்டு தீயணைப்புப் படையினர் சென்றுவிட்டனர். இதுபற்றி காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன மாணவியை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் வராததால் காட்டூர் அருகே பிஏபி வாய்க்கால் பாதை ஒட்டிய தார் சாலையில் கே.எஸ்.கே பவுண்டேஷன் தலைவர் சம்பத்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் அவர்களிடத்தில் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார்.
அத்துடன் பல்லடம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார். இச்சம்பவம் பற்றி அறிந்த பொங்கலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வக்கீல் எஸ். குமார் பல்லடம் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.