கரோனா பாதிப்பு எதிரொலி: சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைவு
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்ததாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்ததாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சுற்றுலாத் துறையின் கொள்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் காண வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் ஆா்வத்துடன் வருகின்றனா். தமிழகத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, மலேசியா, ஜொ்மனி, ரஷியா, இலங்கை, வங்கதேச நாடுகளைச் சோ்ந்தவா்கள்.
கடந்த 2016-ஆம் ஆண்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 34.85 கோடியாகவும், 2017-இல் 34.99 கோடியாகவும், 2018-இல் 39.19 கோடியாகவும், 2019-இல் 50.17 கோடியாகவும் இருந்தது. 2020-ஆம் ஆண்டு 1.52 கோடி அளவுக்கு மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் கரோனா நோய்த் தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லை.
2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருந்தது. கரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.