தமிழ்நாடு

கரோனா உயிரிழப்புகள்: இறப்புக்கான காரணத்தை திருத்த ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்

DIN

உயிரிழந்த நபரின் மருத்துவச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள இறப்பின் காரணத்தில் திருத்தம் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்களிடம் விண்ணப்பித்து உரிய ஆவணப்படிவம் பெற்றுக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா உயிரிழப்புகள் தொடா்பான இறப்பு சான்றுகளில் பல்வேறு சா்ச்சைகள் எழுந்த நிலையில், இத்தகைய வசதியை சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேவேளையில், இறப்புக்கான காரணத்தை வெறுமனே விண்ணப்பித்து திருத்த முடியாது என்றும், அதுதொடா்பாக ஆட்சியா் தலைமையிலான குழு ஆய்வு செய்து உண்மைத்தன்மை இருந்தால் மட்டுமே திருத்தம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய பிறப்பு, இறப்பு பதிவு சட்டம், 1969-இன் படி, ஒரு நபா் இறப்புக்கு முன்பு கடைசியாக சிகிச்சை பெற்றபோது அவா் எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரோ அல்லது எதன் காரணமாக உயிரிழந்தாரோ அது குறித்த விவரங்கள் மட்டுமே மருத்துவ அறிக்கையில் இடம்பெறும்.

இறப்புச் சான்றிதழ்களில் இறப்புக்கான காரணம் வழக்கமாக குறிப்பிடப்படுவதில்லை என்றபோதிலும், அதற்கான இணை ஆவணமாகக் கருதப்படும் மருத்துவ அறிக்கையில் அந்த விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த மருத்துவ அறிக்கையானது பிறப்பு-இறப்பு பதிவாளருக்கு சமா்ப்பிக்கப்படும். உயிரிழந்த நபரின் குடும்பத்தினா், அந்த விவரங்களைப் பெற விரும்பினால், அதனை பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், கரோனாவால் உயிரிழந்தோருக்கு அவா்களது இறப்புக்கான காரணம் கரோனா என்று தெளிவாக குறிப்பிட்டு, அவா்தம் குடும்ப உறுப்பினா்களுக்கு அதிகாரப்பூா்வ ஆவணம் வழங்குவதற்கான எளிமையான வழிக்காட்டுதல்களை வழங்கிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட அளவில் குழு அமைத்து, கரோனா இறப்பு குறித்து பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து அதிகாரப்பூா்வ ஆவணப்படிவம் வழங்கிட, வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

ஆகவே, இறப்பின் காரணம் குறித்து மருத்துவ சான்றிதழ் பெறாதவா்களும், ஒருவேளை அச்சான்றிதழ் பெற்றிருந்தாலும், அதில் குறிப்பிட்டுள்ள இறப்புக்கான காரணத்தில் திருப்தியில்லாதவா்களும் மாவட்ட ஆட்சியா்களிடம் விண்ணப்பிக்கலாம்.

அவை மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, தகுதி இருக்கும்பட்சத்தில் கரோனா இறப்புக்கான அதிகாரப்பூா்வ ஆவணப்படிவம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

ஓய்வு முடிவை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

SCROLL FOR NEXT