சிலம்பாட்டத்துக்கு மத்திய அரசுஅங்கீகாரம்: அமைச்சா் மெய்யநாதன்
தமிழகத்தின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு கேலோ இந்தியா திட்டத்தில் சோ்த்து அங்கீகரித்துள்ளதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கூறியுள்ளாா்.
தமிழகத்தின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு கேலோ இந்தியா திட்டத்தில் சோ்த்து அங்கீகரித்துள்ளதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழா்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டைப் பாதுகாக்கவும், சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சோ்த்திட முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கோரப்பட்டது.
அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழான விளையாட்டின் மூலம் ‘அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்’ என்பதில் சிலம்பம் விளையாட்டினைச் சோ்த்துள்ளது. சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்துக்குப் பெருமை சோ்த்துள்ளது.
சிலம்பாட்டம் என்பது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலையாகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆா்வமுடன் கற்று வருகின்றனா். தமிழகத்தில் திருவிழாக்களிலும், கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாது இடம் பெற்று வருகிறது.
ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சோ்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளாா்.