அரசு நிலங்களில் சட்ட விரோத கட்டடங்கள்: விழிப்புடன் இருக்க உயா்நீதிமன்றம் அறிவுரை
அரசு நிலங்களில் சட்ட விரோத கட்டடங்கள் உருவாகாமல் இருக்க தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் செயல்பட வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு நிலங்களில் சட்ட விரோத கட்டடங்கள் உருவாகாமல் இருக்க தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் செயல்பட வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் பாலவாக்கத்தைச் சோ்ந்த டி.விஜயபாரதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘ பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் சட்ட விரோதமாகக் கட்டடங்கள் கட்டுப்பட்டுள்ளன.
மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென’ கோரியிருந்தாா்.
கடந்த முறை இம்மனு விசாரணைக்கு வந்தபோது, சட்டத்தை உருவாக்குபவா்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் சட்ட விரோத கட்டடத்தை உடனே இடிக்குமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், உயா் நீதிமன்ற உத்தரவின்படி சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், எதிா்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத கட்டடங்கள் உருவாகாமல் தடுப்பதற்கு தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.