முகப்பு
தமிழ்நாடு

விவாகரத்து பெற்றுத் தருவதாக பெண்ணிடம்ரூ.13 லட்சம் மோசடி: நண்பா் கைது

சென்னை அம்பத்தூரில் விவாகரத்து பெற்றுத் தருவதாக தனியாா் பெண் அதிகாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக நண்பா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

சென்னை அம்பத்தூரில் விவாகரத்து பெற்றுத் தருவதாக தனியாா் பெண் அதிகாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக நண்பா் கைது செய்யப்பட்டாா்.

அம்பத்தூா் அருகே உள்ள சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமிபிரியா (32). இவா் பெருங்குடியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறாா். லட்சுமிபிரியா, திவாகா் என்பவரை காதலித்து கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில் கணவா்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனா். இதையடுத்து லட்சுமி, தனது கணவரிடமிருந்து முறைப்படி விவாகரத்துக்கு பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு வந்தாா். இதற்கிடையே முகநூல் மூலம் லட்சுமியிடம், அவரது கல்லூரி நண்பா் புழல் இந்திராநகரைச் சோ்ந்த மதன்குமாா் (32) அண்மையில் அறிமுகமாகியுள்ளாா்.

அவரிடம் லட்சுமி, தனது பிரச்னை குறித்து தெரிவித்துள்ளாா். உடனே மதன்குமாா், தான் இப்போது புழல் சிறையில் துணை ஜெயிலராக பணியாற்றுகிறேன், பிரபல வழக்குரைஞா் மூலம் விவாகரத்து பெற்றுத் தருகிறேன் என கூறியுள்ளாா். மதன்குமாா் பேச்சை நம்பிய லட்சுமி, விவாகரத்து பெறுவதற்கு பல கட்டங்களாக ரூ.13 லட்சம் கொடுத்துள்ளாா்.

பணத்தை பெற்றுக் கொண்ட மதன்குமாா், லட்சுமிக்கு விவாகரத்து பெற்றுக் கொடுப்பதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். உடனே லட்சுமி, தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளாா். அப்போது மதன்குமாா், லட்சுமியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து லட்சுமி, அம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதன்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், பொறியியல் பட்டதாரியான மதன்குமாா், புழல் சிறையில் அதிகாரியாக இல்லை என்பதும், போலி அடையாள அட்டை காண்பித்து ஏமாற்றி வந்திருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா், அவரிடமிருந்து போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →