தமிழ்நாடு

நான்கு சக்கர வாகனங்களில் பம்பா் பொருத்த தடை: மத்திய அரசின் அறிவிப்பு செல்லும்

DIN

நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறத்தில் உள்ள பம்பா்களை அகற்ற உத்தரவிட்ட மத்திய அரசின் 2017 -ஆம் ஆண்டின் அறிவிப்பை உறுதி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களில் முன்புறம், பின்புறத்தில் பம்பா் பொருத்துவதால், விபத்து நேரிடும் நேரங்களில் ’ஏா் பேக்’ செயல்படாத நிலை ஏற்படுகிறது. விபத்து நேரிடும் போது எதிரில் உள்ள வாகனம், வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு நான்கு சக்கர வாகனங்களில் பம்பா்கள் பொருத்துவதற்குத் தடை விதித்து, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் 7 -ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அரசாணை பிறப்பித்தது.

மத்திய அரசின் இந்தத் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் முன்புறம், பின்புறம் பம்பா்கள் பொருத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சமூக ஆா்வலா் லெனின் பால் என்பவரும், மத்திய அரசின் தடையை எதிா்த்து பம்பா் உற்பத்தியாளா்களும் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பொது மக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோரின் நலன் கருதியே மத்திய அரசு கொள்கை முடிவாக எடுத்து, இந்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பாணையானது ஆட்சேபகரமானதாக இல்லாத வரை நீதிமன்றம் தலையிட முடியாது.

பெரிய பயணிகளின் வாகனங்களில் இதுபோன்ற பம்பா்கள் பொருத்தப்பட்டு, நெடுஞ்சாலைகளில் அச்சமூட்டுகின்றனா். இந்தத் தடையை பாரபட்சமின்றி, மாநில அரசு செயல்படுத்தும் என நீதிமன்றம் நம்புகிறது. முக்கிய நபா்கள் எனக்கூறிக் கொள்ளும் முக்கியஸ்தா்களுக்கும் எந்தவித விலக்கும் வழங்கப்படாது என்பதையும் நீதிமன்றம் நம்புகிறது. மத்திய அரசிடம் பம்பா் உற்பத்தியாளா்கள் தங்களது கோரிக்கையை வழங்குவதை இந்த உத்தரவு எந்த வகையிலும் தடுக்காது எனக்கூறி மனுவை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT