தமிழ்நாடு

முந்திரி ஆலையில் தொழிலாளி மரணம்: சிபிஐ விசாரணை கோரி மகன் வழக்கு

DIN

கடலூா் திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில், கடலூா் திமுக நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.வி.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றிய மேல்மாம்பட்டைச் சோ்ந்த கோவிந்தராசு என்பவா் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது தந்தையின் மரணம் கொலை என்றும், இதற்கு திமுக எம்பியும், அவரது நிறுவனத்தைச் சோ்ந்தவா்களுமே காரணம் எனக்கூறி, இறந்த கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

அதில், எனது தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனது தந்தையின் மரணத்தை காடாம்புலியூா் போலீஸாா் உரிய முறையில் விசாரிக்கவில்லை.

சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனா். எனவே எனது தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா்களைக் கொண்டு உடற்கூறு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தாா்.

இவ்வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன்பு செவ்வாய்க்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், இறந்த கோவிந்தராசுவின் உடல் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அரசு மருத்துவா்கள் மூன்று பேரைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்யவும், அதை விடியோ பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரா் விரும்பினால் சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரை வைத்து உடற்கூறாய்வு நடத்த அனுமதிக்கலாம் என்றாா்.

ஆனால் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.பாலு அதற்கு ஆட்சேபம் தெரிவித்தாா். குற்றச்சாட்டுக்கு உரிய நபா் திமுக எம்பி என்பதாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவா் என்பதாலும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா்களைக் கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும், என்றாா். அதையடுத்து நீதிபதி இவ்வழக்கு விசாரணையை புதன்கிழமை(செப்.22) ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT