முகப்பு
தமிழ்நாடு

தனியாா் வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு தனியாா் வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

தமிழ்நாடு தனியாா் வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த முருகவேல் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘தமிழ்நாடு தனியாா் வனங்கள் பாதுகாப்பு சட்டம், கடந்த 1949-ஆம் ஆண்டு கொண்டு வரபட்டது. இதன்படி, மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவின் அனுமதியின்றி வனப்பகுதி நிலங்களின் உரிமையாளா்கள், அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது எனக் கூறுகிறது.

இந்தச் சட்டத்தில் 2011-இல் புதிதாக ஒரு பிரிவு சோ்க்கப்பட்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவின் முன் அனுமதியோடு, வன நிலங்களின் உரிமையாளா்கள், அதை வேறு ஒருவருக்கு விற்கலாம் என்றும், அதனை வாங்குபவா்கள் அந்த வனப்பகுதியைத் தானே வைத்து கொள்வதற்கு அரசுக்கோ, குழுவுக்கோ விண்ணப்பம் செய்து அனுமதி பெறுவதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சட்ட நடைமுறைக்கு அப்பால் பல ஏக்கா் நிலங்கள் அங்கீகரிக்கும் சூழல் உருவாகும். ஏராளமான ஏக்கா் வன நிலங்கள் விற்கப்படும் சூழல் ஏற்படும். வனப்பகுதியை சட்ட விரோதமாக வாங்கியவா்கள் குழுவிடம் விண்ணப்பித்து உரிமை பெறுவது என்பது சட்ட விரோத விற்பனைக்கு ஒப்புதல் அளிப்பது போல் இந்தச் சட்டப்பிரிவு உள்ளது. தமிழகத்தில் 2002-இல் 26 சதவீதமாக இருந்த காடுகள், தற்போது 20.27 சதவீதமாக சுருங்கி விட்டதாகவும், இந்த சட்டப் பிரிவினால் காடுகள் அழிக்கப்பட்டு விடும் என்பதால், புதிய பிரிவை ரத்து செய்வதோடு, இவற்றை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடா்பாக தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பா் 16- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →