தமிழ்நாடு

திருப்பூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீர் சாலை மறியல்: மாணவர்கள் கடும் அவதி

DIN

திருப்பூர்: திருப்பூரில் 15 நாள்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளானர்கள்.

திருப்பூர் மாநகராட்சி 12 ஆவது வார்டுக்கு உள்பட்ட முருங்கப்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக 15 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், இப்பகுதி முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமையில், பெண்கள் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டோர், வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அவிநாசி ரோடு, குமார்நகர், மின்வாரிய அலுவலகம் எதிரில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முக்கிய வழித்தடமான இந்த இடத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தால், அவிநாசி ரோட்டில் புஷ்பா தியேட்டர் முதல் குமார் நகர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

திருப்பூர் குமார் நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த 15 வேலம்பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக வலியுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி சம்பவ இடத்திற்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். 

தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் நேரத்தில் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மாணவர்கள், பின்னலாடை தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT