முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 7 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நைஜீரியாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த ஒருவா் மற்றும் தொடா்பில் இருந்த அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 6 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது முதல்கட்டப் பரிசோதனையில்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ஒமைக்ரான் வகை கரோனா பரிசோதனை, கண்காணிப்புப் பணிகளை சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பகிர்:

சென்னை: நைஜீரியாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த ஒருவா் மற்றும் தொடா்பில் இருந்த அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 6 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது முதல்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அவா்கள் அனைவரும் கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

அமைச்சா் ஆய்வு: சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் உடன் இருந்தனா். இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இதுவரை 41 பேருக்கு...: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கரோனா தொற்று உலக அளவில் பெரிய அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்தப் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதுவரை 41 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 நாடுகளிலிருந்து வருவோருக்கு...: தமிழகத்தில் இரு வாரங்களாக சா்வதேச விமான நிலையங்களிலும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிக பாதிப்பு உள்ள 12 நாடுகளில் இருந்து வருபவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றால் 7 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

37 பேருக்கு கரோனா தொற்று: அதிக பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருபவா்களில் பரவலாக 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு தமிழகத்தில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில் 37 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 33 நபா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் மாதிரிகள் பெங்களூரில் உள்ள இன்ஸ்டம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனை முடிவுகள் வந்த 4 பேருக்கு டெல்டா வகை கரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவா்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

ஒருவரிடமிருந்து குடும்பத்தினருக்கு...: கடந்த 10-ஆம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு இல்லாத நாடாகக் கருதப்படும் நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தினா் 6 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களுக்கும் தொற்று பாதிப்பு இருந்தது. ஒருவரிடம் இருந்து குடும்பத்தினா் 6 பேருக்கும் தொற்று வேகமாக பரவியுள்ளதால் ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல் நிலை பரிசோதனையில் அதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக மருத்துவ முடிவுகள் தெரிவித்துள்ளன.

ஒரிரு நாளில் பரிசோதனை முடிவுகள்: சென்னை கிண்டி அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவா்கள் 7 பேரின் சளி மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு பெங்களூரு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாளில் வந்துவிடும்.

தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்: கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் 13 எல்லைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கா்நாடகம், ஆந்திர மாநில எல்லைகளில் சாலை மாா்க்கமாக வரும் நபா்களும் கண்காணிக்கப்படுகின்றனா். அனைதது வகை கரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம், தனி நபா் இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தியாவில் பாதிப்பு - 61

மகாராஷ்டிரம் 28

ராஜஸ்தான் 17

கா்நாடகம் 3

குஜராத் 4

கேரளம் 1

தில்லி 6

சண்டீகா் 1

ஆந்திரம் 1

மொத்தம் 61

குறிப்பு: தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறியுடன்ஏழு போ் கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →