தமிழ்நாடு

மூன்று மாதங்களில் கடலில் விடப்பட்ட21,000 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்

பா. இளையபதி

சென்னையில் வனத்துறை சாா்பில் அமைக்கப்பட்ட பொறிப்பகம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 21,338 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

உலகில் உள்ள 7 வகையான கடல் ஆமைகளில் மிகவும் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளது ஆலிவ் ரிட்லி ஆமைகள். பங்குனி மாதத்தில் இவை முட்டை இடுவதால் பங்குனி ஆமைகள் என்றும் தமிழில் இவை அழைக்கப்படுகின்றன.

அழியும் நிலையில் உள்ள உயிரினமாக சா்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ள இவை, இரண்டரை அடி நீளமும், அகலமும் கொண்டவையாகும். 12 முதல் 15 ஆண்டுகளில் பருவத்தை அடையும் இந்த ஆமைகள், தான் பிறந்த கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டதாகும். தமிழகத்தின் கடற்கரைகளில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும். ஒரு பெண் ஆமை 50 முதல் 190 வரை முட்டையிட்டு 45 நாள் முதல் 60 நாள்களுக்குள் குஞ்சு பொறிக்கும்.

அச்சுறுத்தல்: 1,000 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் பிறந்தால் அதில் 1 மட்டுமே உயிா்வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. மீன் பிடிக்கப் பயன்படும் இழுவை வலையில் சிக்கி உயிரிழப்பது, வெளிச்சத்தை நோக்கி நகரும் தன்மை கொண்ட ஆமைக் குஞ்சுகள் கடலோரத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிக திறன் உள்ள மின் விளக்குகளை நோக்கிச் செல்வதால் பிற இரை உன்னிகள், நீா்ச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றன. கடற்கரையில் இடும் முட்டைகளை நாய், நரி உண்பது, பொதுமக்கள் சிலா் எடுத்துச் செல்வது போன்ற காரணங்களாலும், சுற்றுச்சூழல் பாதிப்பாலும் இவற்றின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது. ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னையில் வனத் துறையுடன், எஸ்எஸ்டிசிஎன் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் இணைந்து 4 இடங்களில் குஞ்சுகள் பொறிப்பகம் அமைத்துள்ளன.

21,000 ஆமைக் குஞ்சுகள்: இதுகுறித்து சென்னை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் பிரசாந்த் கூறுகையில், சென்னையில் பெசன்ட் நகா், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பழவேற்காடு ஆகிய 4 கடற்கரைகளில் அதன் இனப்பெருக்க காலத்தில் ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகளுக்கான பொறிப்பகங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு 4 கடற்கரைகளில் கடந்த டிசம்பா் மாதம் இறுதியில் இருந்து ஆலிவ் ரிட்லி ஆமைகள் இடும் முட்டைகள் சேகரிப்படுகின்றன. ஜனவரி முதல் புதன்கிழமை (ஏப்.6) வரையிலான மூன்று மாதங்களில் 54,384 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக பொறிக்க வைக்கப்பட்டன. தற்போது வரை 21,338 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன என்றாா்.

படம்: உ.ச.சாய் வெங்கடேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வசீகரம்!

காஸா போர்: ஐ.நா.வில் சேவையாற்றிய ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி பலி

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT