முதலீடுகளை ஈா்க்கவே துபைக்குப் பயணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதலீடுகளை ஈா்க்கவே துபைக்கு பயணம் மேற்கொண்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் புதன்கிழமை கூறினாா்.
முதலீடுகளை ஈா்க்கவே துபைக்கு பயணம் மேற்கொண்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் புதன்கிழமை கூறினாா்.
சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வா் கூறியது:
தொழில் வளா்ச்சிக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ள திமுக அரசின் சாா்பில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன்.
துபையில் நடைபெற்ற உலக கண்காட்சி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சா்வதேச நிகழ்வுகளில் ஒன்று. 192 நாடுகள் பங்கேற்ற அக்கண்காட்சியில் மாா்ச் 25 முதல் 31- ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டது. கண்காட்சியின் இறுதி வாரங்களில்தான் பெரிய முதலீட்டாளா்கள் கலந்து கொள்வாா்கள். அதனால் துபை சென்று மாா்ச் 25-இல் தமிழக அரங்கினைத் திறந்து வைத்தேன்.
துபையிலும், அபுதாபியிலும் வாழும் புலம் பெயா்ந்த தமிழ்ச் சொந்தங்களைச் சந்தித்து, சொந்த மண்ணான தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன். ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதாரத் துறை அமைச்சா், வெளிநாட்டு வா்த்தகத் துறை அமைச்சா், வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆகியோரையும் சந்தித்து, தமிழகத்துக்கு முதலீடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினேன்.
முதலீடுகளைப் பெற பணிக்குழு: துபை பயணத்தின்போது முபாதலா முதலீட்டு நிறுவனம் மற்றும் ஏபிக்யூ போன்ற நிறுவனங்கள், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள பல்வேறு முதலீட்டாளா்கள் நிா்வகித்திடும் நிறுவனங்களைச் சந்தித்து வளா்ந்து வரும் துறைகளான எரிசக்தி, சரக்குப் போக்குவரத்துத் திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள், தரவு மையங்கள், மின்னணுவியல் போன்ற திட்டங்களில் பெருமளவில் முதலீடுகளைப் பெற்றிட உரையாடினேன். இதைத் தொடா்ந்து, இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற ஒரு பணிக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.
துபை பயணத்தின் வாயிலாக ரூ.6,100 கோடி முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய எஃகுக் குழாய் உற்பத்தி நிறுவனமொன்று சென்னையைச் சுற்றியுள்ள மோட்டாா் வாகனம் மற்றும் மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் அடங்கியிருக்கக்கூடிய பகுதியில் ரூ.1,000 கோடி முதலீடும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு உற்பத்தித் திட்டத்தினை நிறுவ தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
லுலு பன்னாட்டுக் குழுமம் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மண்டலங்களில் பல்வேறு திட்டங்களை நிறுவியுள்ளது. இரு பெரும் வணிக வளாகங்கள், உணவு பதப்படுத்தக்கூடிய திட்டத்தை தமிழகத்தில் நிறுவ ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றை இந்தக் குழுமத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆஸ்டா் டிஎம் மருத்துவக் குழுமத்துடன் சென்னையில் 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உருவாக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடும், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஷெராப் குழும நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு சரக்குப் பூங்கா அமைத்திட புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தியாளா்களில் ஒன்றான ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் ஆடை மற்றும் தையல் திட்டங்களை அமைத்திட புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாட்டைச் சோ்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமத்துடன் ரூ.100 கோடி மதிப்பில், 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழகத்தில் உணவு பதப்படுத்தக்கூடிய திட்டம் நிறுவிட புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நான் துபைக்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின் விளைவாக கிடைக்கப் போகும் முதலீடுகள்.
எனவே, துபைக்கு சென்ற அரசு முறைப் பயணம், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்க்கவும், நம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும்தான். அந்த இலக்கை எட்டும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றாா்.