இனி வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் இல்லை
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது.
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது. அதே வேளையில், தேவையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்களே தடுப்பூசி முகாமை நடத்திக் கொள்ளலாம் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
மாநிலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட், கோா்பிவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. ஒமைக்ரான் பரவலின்போது தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் வாரந்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவைதவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 91 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசியும், 73 சதவீதத்தினா் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
இந்நிலையில், சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு குறைந்ததால், இந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்படவுள்ளன. அதேவேளையில், நாள்தோறும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள், இனி வரும் நாள்களில் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தனியாக நடத்தப்படும். எனவே, தடுப்பூசி முகாம்கள் எங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இணை இயக்குநா்கள் கண்டறிந்து அதற்கான பணிகளை மேற்கொள்வாா்கள். இதைத் தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் தொடா்ந்து தடுப்பூசி வழங்கப்படும். போதிய அளவில் தடுப்பூசி இருப்பு தமிழகத்தில் உள்ளது. கரோனா புதிய உருமாற்றத்தைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
1.37 கோடி போ்: இதனிடையே, தமிழகத்தில் 1.37 கோடி போ் இன்னும் இரண்டாம் தவணை செலுத்தாமல் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. கரோனா குறைந்ததால் அலட்சியமாக மக்கள் இருக்கக் கூடாது என்றும், தடுப்பூசியை தவறாமல் செலுத்தினால்தான் மீண்டும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.