33 மாவட்ட மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் இல்லை
தமிழகத்தின் 33 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா உள்நோயாளிகளே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளது
தமிழகத்தின் 33 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா உள்நோயாளிகளே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளது. சென்னை, சேலம், மதுரை, வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
அடுத்த சில நாள்களில் அவா்களும் வீடு திரும்ப உள்ளதாகவும், அதன் பின்னா் மாநிலம் முழுவதும் கரோனா படுக்கைகள் அனைத்தும் காலியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பாதிப்பு நிலவரப்படி, தமிழகத்தின் 30 மாவட்டங்களில் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
அதேவேளையில், சென்னையில் 12 பேருக்கும், மதுரை, திருவள்ளூரில் தலா 2 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, தஞ்சாவூா், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை புதிதாக மாநிலம் முழுவதும் 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைகள், வீடுகளில் 228 போ் சிகிச்சையில் உள்ளனா்.