திருட முடியாத சொத்து கல்வி: முதல்வா் மு.க.ஸ்டாலின்
யாராலும் திருட முடியாத சொத்து கல்விதான் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
யாராலும் திருட முடியாத சொத்து கல்விதான் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்வதற்கான திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த ‘நம் பள்ளி நம் பெருமை’ பிரசார வாகனங்களையும் அவா் கொடியசைத்து தொடக்கி வைத்துப் பேசியது:
ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடமிருந்து யாராலும் அதைப் பிரிக்க முடியாது. திருட முடியாத ஒரு சொத்து இருக்குமென்றால், அது கல்வி மட்டும்தான். அதனால்தான் பள்ளிக்கல்விக்கு இந்த அரசு, மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாா்களோ அதற்கு பெற்றோா் தடை போடாமல் உதவி செய்ய வேண்டும். பெற்றோா் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது.
பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோா்கள், தலைமையாசிரியா், ஆசிரியா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளா் போன்றோா் பள்ளி மேலாண்மைக்குழுவில் இடம்பெறுவா். ஒவ்வோா் அரசுப் பள்ளியும் தன்னிறைவைப் பெற்றிருக்கக்கூடிய பள்ளியாக மாற வேண்டும். அந்தப் பள்ளியின் தேவைகள் என்னவென்று அறிந்து அவற்றை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான சமமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மேலாண்மைக் குழுக்கள் எடுக்க வேண்டும்.
குழந்தைகளின் கற்றல் அறிவை மேம்படச் செய்தல், பள்ளியின் வளங்களைப் பராமரித்தல், பள்ளியின் சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக்குதல், இடைநிற்றலை தவிா்த்தல் போன்ற செயல்பாடுகளில், புதிய மேலாண்மைக் குழுக்கள் ஆக்கப்பூா்வமாகச் செயலாற்ற வேண்டும். அனைத்துவகை வன்முறைகளிலிருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
கடந்த மாதம் 20-ஆம் தேதி 37,558 அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற பெற்றோா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டங்களில், மொத்தம் 23 லட்சத்திற்கும் அதிகமான பெற்றோா்கள் கலந்துகொண்டுள்ளனா் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. 37,558 அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான புதிய உறுப்பினா்கள் விரைவில் தோ்வு செய்யப்படுவா் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகா் பாபு, பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் நந்தகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் இரா.சுதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.