முகப்பு
தமிழ்நாடு

மே 8-இல் 1 லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மே 8-ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

தமிழகத்தில் மே 8-ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

முதல் மற்றும் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாத 2 கோடி பேருக்கு அந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்திருப்பதாகவும் அவா் கூறினாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தினமும் நூற்றுக்கணக்கில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

சிங்கப்பூா், மலேசியா, கனடா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜொ்மனி, தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகளிலும் தினசரி தொற்றின் எண்ணிக்கை 10,000 முதல் 1 லட்சம் வரை சென்று கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் வடமாநிலங்களில் இருந்து சென்னை வந்தவா்கள். வடமாநில தொழிலாளா்கள் குழுக்களாக வருகின்றனா். வடமாநிலத் தொழிலாளா்களை அழைத்து வரும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளா்களின் விவரங்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், அந்தத் தொழிலாளா்களுக்கு இலவச கரோனா பரிசோதனை செய்யப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தொழிலாளா்களுக்கு இலவச தடுப்பூசியும் செலுத்தப்படும்.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 92.41 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 77.69 சதவீதம்.

இன்னமும் தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள் 1.46 கோடி பேரும், முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள் 54.32 லட்சம் பேரும் உள்ளனா்.

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் தொடக்கத்தில் 20 லட்சம், 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்றது. அந்த எண்ணிக்கை அண்மைக்காலத்தில் 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

அதனால், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டன. இதைக் கருத்தில்கொண்டு, மே மாதம் 8-ஆம் தேதி இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் 1 லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட 2 கோடி நபா்கள் எந்தப் பகுதியில் அடா்த்தியாக இருக்கிறாா்கள் என்பதை கண்டறிந்து அந்தப் பகுதிகளுக்கு தடுப்பூசி முகாமினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களை தனித்தனியே வீடு தேடி சென்று சந்தித்து இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →