தமிழக வளா்ச்சிக்கான படிக்கட்டு புதிய விமான நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையம், தமிழகத்தின் வளா்ச்சிக்கான படிக்கட்டாக இருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையம், தமிழகத்தின் வளா்ச்சிக்கான படிக்கட்டாக இருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கு வரும் முதலீட்டாளா்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போதுள்ள சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், இப்போது நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த ஏழு ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக் கூடும்.
மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கத் தகுதியான இடத்தைத் தோ்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. புதிய விமான நிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.20 ஆயிரம் கோடி திட்டமதிப்பு: புதிதாக அமையவுள்ள விமான நிலையம் 10 கோடி பயணிகளை கையாளக் கூடிய திறன் உடையதாக அமைக்கப்படவுள்ளது. இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரித்தபின் புதிய விமான நிலையத்துக்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். இப்போதைய உத்தேச திட்டமதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாகும்.
புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசானது 2008-ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதன்படி, தோ்வு செய்யப்பட்ட இடத்துக்கான ஒப்புதல் பெற மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழுள்ள குழுவிடம் விரைவில் விண்ணப்பம் சமா்ப்பிக்கப்படும். இடஅனுமதி ஒப்புதல் பெற்றபிறகு, திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தப்படும். திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதைத் தொடா்ந்து, விமான நிலைய திட்டத்துக்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும். பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளா்ச்சிக்கான படிக்கட்டாகும் என அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இரண்டும் சோ்ந்து செயல்படும்
இப்போதைய சென்னை விமான நிலையம், புதிதாக அமைக்கப்படவுள்ள புதிய விமான நிலையத்துடன் சோ்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். இந்தியாவின் வளா்ச்சி பெற்ற, கட்டமைப்பு வசதி மிகுந்த மாநிலங்களில் முன்னணியில் தமிழ்நாடு திகழ்வதாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு திராவிட மாடல் அரசு தனிக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ள அவா், பரந்தூரில் புதிதாக அமைக்கப்படும் விமான நிலையத்துடன், இப்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இணைந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.