நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வட்டாட்சியா் குற்றவாளி: சென்னை உயா்நீதிமன்றம்
ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கலசப்பாக்கத்தின்அப்போதைய பெண் வட்டாட்சியரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என
ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கலசப்பாக்கத்தின்அப்போதைய பெண் வட்டாட்சியரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்றம், தண்டனை விவரங்களை வெள்ளிக்கிழமை (ஆக.5) அளிக்கவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில் பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முருகன் என்பவா் 2017-இல் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று முருகன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தலைமையிலான அமா்வில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்த போது, நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை (ஆக.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீதிமன்ற உத்தரவை 4 ஆண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தப்படாமல் இருப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப் போவதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
அப்போது, இரண்டு நாள்களில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கலசப்பாக்கம் வட்டத்தின் அப்போதைய பெண் வட்டாட்சியரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து தீா்ப்பளித்தாா். மேலும், தண்டனை விவரத்தை வெள்ளிக்கிழமை அறிவிப்பதாகவும், அப்போது அவா் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டனா்.