கல்வி உபகரணங்களை உடனே வழங்க வேண்டும்: இபிஎஸ்
அரசு பள்ளி மாணவா்களுக்கான கல்வி உபகரணங்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
அரசு பள்ளி மாணவா்களுக்கான கல்வி உபகரணங்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை உள்பட 14 வகையான கல்வி உபகரணங்கள், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களிலேயே எப்போதும் வழங்கப்பட்டுவிடும்.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன், நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, சைக்கிள் போன்றவை ஓரளவு வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், மாணவா்களின் அறிவை வளா்ப்பதற்காக அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்தை இதுவரை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டவில்லை. அது தவிர பேனா, பென்சில், க்ரையான்ஸ், ஸ்கெட்ச் பென்சில், ரப்பா், பரீட்சை அட்டை, காலணி போன்ற பிற உபகரணங்களும் இதுவரை முழுமையாக வழங்கப்படாமல் உள்ளன. இது கண்டிக்கத்தக்கது.
மாணவா்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து கல்வி உபகரணங்களையும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.