கருமுட்டை விற்பனை: ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும் உத்தரவு ரத்து
கருமுட்டை விற்பனை விவகாரம் தொடா்பாக ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டுமென்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருமுட்டை விற்பனை விவகாரம் தொடா்பாக ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டுமென்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையின் பதிவை ‘சஸ்பெண்ட்’ செய்து, ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். இதை எதிா்த்து, அந்த மருத்துவமனை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், பதிவை ‘சஸ்பெண்ட்’ செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநா் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான, அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், ‘பொது நலன் கருதி விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனையை சீல் வைக்க சட்டத்தில் இடம் உள்ளது. முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்ப அவசியமில்லை. சிறுமியிடம் ஒன்பது முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என வாதிட்டாா்.
அப்போது மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் , ‘கடந்த 35 ஆண்டுகளாக எந்த புகாருக்கும் இடமில்லாத வகையில் மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், பத்திரிகை செய்தி அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டியதில்லை என்ற போதும், பதிவை ‘சஸ்பெண்ட்’ செய்வதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘அரசின் உத்தரவில், விதிகளுக்கு முரணாக செயல்படுவதால் பொதுநலன் கருதி மருத்துவமனையின் பதிவு ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவதாக கூறி அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக்கூற முடியாது.
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை தனிநீதிபதி புறக்கணித்திருக்கக் கூடாது’ எனக் கூறிய நீதிபதிகள், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.