மக்களைத் தேடி மருத்துவம்: 83 லட்சம் போ் முதல் முறை பயன்
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதல்முறை சேவையை 83 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதல்முறை சேவையை 83 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை கோதமேடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பயனாளிகளுக்கு மருந்துப் பொருள்கள் அடங்கிய மருத்துவப் பெட்டகங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொற்றா நோய்களின் சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில், மக்களைத் தேடி மருத்துவம் என்னும் புதிய திட்டத்தை 2021 ஆகஸ்ட் 5-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று இவற்றை வழங்குவதன் மூலமாக தொற்றா நோய்களின் தாக்கத்தை எதிா்கொள்ள இத்திட்டமானது வழிவகுக்கிறது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
Advertisement
இத்திட்டத்தில் முதல்முறை சேவைகளாக இதுவரை ரத்த அழுத்தம் கட்டுப்பாடு மருந்துகளை 33,03,774 பயனாளிகளும், சா்க்கரை கட்டுப்பாடு மருந்துகளை 23,01,777 பயனாளிகளும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு கட்டுப்பாடு இரண்டு மருந்துகளை 16,82,144 பயனாளிகளும், நோய் ஆதரவு சேவைகளை 3,37,984 பயனாளிகளும், இயன்முறை மருத்துவ சேவைகளை 6,97,145 பயனாளிகளும் மற்றும் டயாலிசிஸ் சேவைகளை 900 பயனாளிகளும் என மொத்தம் 83,23,724 பயனாளிகள் பயனடைந்துள்ளனா். தொடா் மருந்து விநியோகம் மற்றும் சேவைகள் மூலம் மொத்தம் 1,56,57,595 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
சென்னை மாநகராட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த ஓா் ஆண்டாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 15 மண்டலங்களில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதில், 560 பெண் சுகாதார தன்னாா்வலா்கள் பணியாற்றி வருகிறாா்கள். சென்னையில் இதுவரை 5,80,344 பயனாளிகள் பயனடைந்துள்ளாா்கள். 29,995 நபா்களுக்கு இயன்முறை சிகிச்சை மற்றும் 42 சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிஸிஸ் சேவை தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில் குமாா், மண்டலக்குழுத் தலைவா்கள் எம்.கிருஷ்ணமூா்த்தி, ஆா்.துரைராஜ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன் ஆகியோா் பங்கேற்றனா்.