பில்கிஸ் பானு: குற்றவாளிகள் விடுதலைக்கு கே.எஸ். அழகிரி கண்டனம்
பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடே கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசு தண்டனை குறைப்பு வழங்கியது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. ஆட்சியும், அதிகாரமும் தங்களிடம் இருக்கிற ஆணவப் போக்கின் காரணமாக, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற பா.ஜ.க.வின் எதேச்சதிகார மனப்பான்மை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.
அனைத்து நீதிமன்றங்களாலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளைத் தான் குஜராத் பா.ஜ.க. அரசு விடுதலை செய்திருக்கிறது. இதை எதிர்த்து சமூகநல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு பரிசீலனைக்கு வருவது சற்று ஆறுதலைத் தருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு, டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறையை இந்திய நீதித்துறையால் மிகக் கடுமையாகப் பார்க்க நேரிட்டது.
இந்தச் சூழலில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பா.ஜ.க. அரசு தண்டனை குறைப்பின் மூலம் விடுவித்தது பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக் கொடூரமான அநீதியாகும். விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் சிறைச் சாலைக்கு வெளியே பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மிகப் பெரிய வரவேற்பு அளித்ததை விடக் கொடுமையான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.
இதையும் படிக்க.. வாழைப்பழத் தோலில் இத்தனை நன்மைகளா?
அதேநேரத்தில், பில்கிஸ் பானுவுக்கு நீதி கேட்டு போராடிய தீஸ்தா செதல்வாட், ஆர்.பி. ஸ்ரீகுமார், சஞ்ஜீவ்பட் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இவர்களுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இன்று வரை அவர்கள் வேறு எந்த குற்ற வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்கள் அல்ல. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் வகையில் இவர்கள் மூவரும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும், அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்காக நீதி கேட்டுப் போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், வன்கொடுமை குற்றத்திற்காக நீதிமன்றங்களாலேயே தண்டிக்கப்பட்டவர்களை குஜராத் பா.ஜ.க. அரசு விடுதலை செய்திருக்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பு அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே இத்தகைய சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்குப் பரிவு காட்டும் மோடி அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.