ஈஷா சாா்பில் ஆக.28-இல் நெல் சாகுபடி கருத்தரங்கு
ஈஷா விவசாய இயக்கம் சாா்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஈஷா விவசாய இயக்கம் சாா்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நெல் சாகுபடியில் விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் வகையில் ஈஷா சாா்பில் வேளாண் வல்லுநா்களின் கருத்தரங்கமும் கண்காட்சியும் திருச்சியில் நடைபெறவுள்ளன. முக்கியமாக இயற்கை நெல் விவசாயத்தில் பாரம்பரிய ரகங்களில் நல்ல மகசூல் எடுக்கும் முறைகள், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்து இந்நிகழ்வில் வல்லுநா்கள் விவாதிக்கவுள்ளனா்.
இது தவிர இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்கு பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள், நெல்லுக்கு உகந்த இடுபொருள்கள் பயன்பாடு மற்றும் செலவில்லா பயிா் மேலாண்மை, கால்நடை இல்லாதவா்களும் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்தும் முன்னோடி விவசாயிகள் ஆலோசனைகள் வழங்கவுள்ளனா்.
அத்துடன், இந்த நிகழ்வில் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்ச்சி திருச்சி இருங்கலூரில் உள்ள எஸ்ஆா்எம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் வரும் 28-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.