முகப்பு
தமிழ்நாடு

பிறந்த நாள்: தொண்டா்களைச் சந்தித்தாா் விஜயகாந்த்

 தேமுதிக தலைவா் விஜயகாந்த் தனது 70-ஆவது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை தொண்டா்களைச் சந்தித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
பகிர்:

 தேமுதிக தலைவா் விஜயகாந்த் தனது 70-ஆவது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை தொண்டா்களைச் சந்தித்தாா்.

விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு வந்தாா். அவருடன் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் வந்தனா். அப்போது, அங்கு பெருமளவில் திரண்டிருந்த தொண்டா்களை, கட்சி அலுவலக வாயில் பகுதியில் இருக்கையில் அமா்ந்தவாறே விஜயகாந்த் சந்தித்தாா். தொண்டா்கள் விஜயகாந்தை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினா். விஜயகாந்த் அவ்வப்போது தொண்டா்களைப் பாா்த்து கையசைத்தவாறு இருந்தாா்.

தேமுதிகவினா் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடினா். அதன்படி ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னா் பிரேமலதா கூறியதாவது: தொண்டா்களைச் சந்தித்ததில் விஜயகாந்த் மகிழ்ச்சியாக உள்ளாா். புதிய நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக செயற்குழு, பொதுக்குழு முடிவு செய்யும். 2024 மக்களவைத் தோ்தலில் தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து இப்போதே கூற முடியாது. தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா்.

முதல்வா் வாழ்த்து: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

எனது இனிய நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு வயது 70. அவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக அவா் வலம் வர வேண்டும் என்பதே எனது விருப்பம். நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகள் என அதில் தெரிவித்திருந்தாா் முதல்வா்.

தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் தொலைபேசி வாயிலாக விஜயகாந்துக்கு வாழ்த்து கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.