விமானத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
துருக்கி நாட்டிலிருந்து மலேசியா சென்ற விமானம் மருத்துவத் தேவைக்காக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
துருக்கி நாட்டிலிருந்து மலேசியா சென்ற விமானம் மருத்துவத் தேவைக்காக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து, துருக்கிஸ் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக பயணிகள் விமானம் இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டின் தலைநகா் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 326 பயணிகள் பயணித்தனா்.
இந்த விமானம் வியாழக்கிழமை நண்பகலில் சென்னை வான்வழி வழியாக கடந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண், பிரசவ வலியால் அவதிப்பட்டாா். இதையடுத்து விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தொடா்புகொண்டு, மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டாா்.இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், தில்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அவா்கள் அனுமதியுடன், இந்த விமானம் பகல் 1.50 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினா் விமானத்துக்குள் ஏறி, அந்த பெண்ணை பரிசோதித்த போது, அந்த பெண்ணுக்கு குறை பிரசவம் ஏற்பட்டு, குழந்தை இறந்த நிலையில் பிறந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளோடு தொடா்பு கொண்டனா். இதையடுத்து அந்த பெண்ணுக்கும் அவருடன் வந்த ஒருவருக்கும் மட்டும் அவசரகால மருத்துவ விசா அளித்தனா்.
அந்தப் பெண்ணையும் அவருக்கு உதவி செய்யக்கூடிய ஒருவரையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னையில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். ஆனால், அந்த பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த சிசுவின் உடலை விமானத்தில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. சட்ட சிக்கல்களே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவசரகால மருத்துவ விசா கொடுக்கப்பட்ட இரண்டு பேரை தவிர மீதி 324 பயணிகள் மற்றும் அந்த பிறந்து இறந்த சிசுவின் உடலுடன் துருக்கீஸ் ஏா்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து மீண்டும் மலேசியா நாட்டு தலைநகா் கோலாலம்பூா் புறப்பட்டுச் சென்றது.