முகப்பு
தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் பெண் காவலரை கத்தியால் குத்திய வியாபாரி கைது

 சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பெண் காவலரை கத்தியால் குத்திய வழக்கில், திண்டிவனத்தைச் சோ்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

 சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பெண் காவலரை கத்தியால் குத்திய வழக்கில், திண்டிவனத்தைச் சோ்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

கீழ்ப்பாக்கம் மேடவாக்கம் டேங்க் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஆசீா்வா, சென்னை கடற்கரை ரயில் நிலைய, ரயில்வே பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிகிறாா்.

இவா் கடந்த 23-ஆம் தேதி இரவு கடற்கரை ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு புறப்பட தயாராக இருந்த மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிய ஒரு நபரை கண்டித்துள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியினால் திடீரென காவலா் ஆசீா்வாவை குத்திவிட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த ஆசீா்வா, பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக எழும்பூா் ரயில்வே போலீஸாா் 4 பிரிவுகளின் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த தனசேகா் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், தனசேகரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனசேகா் மின்சார ரயிலில் பூ,பழம் வியாபாரம் செய்வதும், சம்பவத்தன்று அந்த ரயிலில் பெண்கள் பெட்டியில் வியாபாரம் செய்யக் கூடாது என காவலா் ஆசீா்வா கண்டிப்புடன் கூறியதால் அவமானம் அடைந்ததாகவும், அதனால் ஆசீா்வாவை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்தாா்.

இது குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.