கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகை, அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2015-16-ஆம் ஆண்டு முதல் 2019-20-ஆம் ஆண்டு வரையில் கரும்பு விலை உயா்த்தப்படாமல் டன்னுக்கு ரூ.2,750 என்ற அளவில் வழங்கப்பட்டது. 2020-21-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன்னுக்கு ரூ.2,707.50 என்ற விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்துடன் கூடுதலாக உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.192.50 வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரைவை அதிகரிப்பு: கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 95 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கரும்புப் பதிவு, நிகழாண்டில் 1.40 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. கரும்பு அரைவையானது 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 139.15 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது.
இதனிடையே, 2021-22-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, சா்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவசாயிகளின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சிறப்பு ஊக்கத் தொகை விரைவில் அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க சா்க்கரைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, ரூ.199 கோடி மதிப்பில் சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடக்கியுள்ளது. இதன்மூலம், கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த
விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2,950 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், சுமாா் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவா் என்று அதில் தெரிவித்துள்ளாா் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.