முகப்பு
தமிழ்நாடு

வாழப்பாடி அருகே தவறான சிகிச்சையால் விவசாயி பலி? உறவினர்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மருந்துக்கடை நடத்தி வருபவர் தவறான சிகிச்சை அளித்ததால் விவசாயி உயிரிழந்ததாகக் கூறி,‌ அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:14 AM
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயி சின்னப்பனின் உறவினர்கள்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மருந்துக்கடை நடத்தி வருபவர் தவறான சிகிச்சை அளித்ததால் விவசாயி உயிரிழந்ததாகக் கூறி,‌ அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால், வெள்ளிக்கிழமை இரவு வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம்‌ அடுத்த விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னப்பன் (52). இவர் வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்திலுள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த கிராமத்தில் அல்லோபதி மருந்துக்கடை நடத்தி வரும் செக்கடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி (42) என்பவரிடம் சிகிச்சை பெற்றதாகவும், அப்போது, சின்னப்பனுக்கு, மருந்து கடைக்காரர் பூபதி ஊசி வழியாக மருந்து செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது மயங்கி விழுந்த விவசாயி சின்னப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த விவசாயி சின்னப்பன்.

இதுகுறித்து தகவலறிந்த விவசாயின் உறவினர்கள் திரண்டு வந்து தவறான சிகிச்சை அளித்த, மருந்து கடைக்காரரை கைது செய்யக்கோரியும், உரிய நிவாரணம் பெற்றுக் கொடுக்கக் கோரியும், வெள்ளாளபட்டியில் மருந்துக்கடை அருகிலேயே பேளூர்-  கல்வராயன்மலை கருமந்துறை சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். இதனால், வெள்ளிக்கிழமை இரவு இப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி ஹரிசங்கரி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புசெழியன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விவசாயி சின்னப்பன் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, தவறான சிகிச்சை அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து விவசாயின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, நள்ளிரவு 11 மணிக்கு மேல் கலைந்து சென்றனர். 

விவசாயியின் உடலைக் கைப்பற்றிய ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வெள்ளாளப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் மருந்துக்கடையை பூட்டிய வருவாய்த்துறை அதிகாரிகள், மருந்துக்கடை நடத்தி வரும் பூபதி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →