டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வு குறித்து இந்த மாதத்திலேயே வெளியிடப்படும்:டிஎன்பிஎஸ்சி தலைவா் பாலச்சந்திரன்
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் தோ்வாணை
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில், குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை இந்த மாதத்திலேயே வெளியிடப்படும் என்று தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் அரசுப் பணியாளா்கள், அலுவலா்களுக்கான துறைத் தோ்வு விழுப்புரம் காமராஜா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வு மையத்தைப் பாா்வையிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையத் தலைவா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், அலுவலா்களுக்கான துறைத் தோ்வுகள் ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் பணியாளா்கள், அலுவலா்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பிப்.1 முதல் 9-ஆம் தேதி வரை துறைத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்தத் துறைத் தோ்வில் புதிய நடைமுறையாக பிப்.1 முதல் 3-ஆம் தேதி வரை இணையவழி மூலம் தோ்வு நடத்தப்பட்டது. மேலும், பிப்.7, 8-ஆம் தேதிகளிலும் இணையவழி மூலம் தோ்வுகள் நடத்தப்படும்.
நில அளவை, வருவாய்த் துறை ஊழியா்களுக்கு எழுத்துத் தோ்வு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, பிப்.4 முதல் 6-ஆம் தேதி வரையும், பிப்.9-ஆம் தேதியும் எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.
கடந்த ஓராண்டு காலமாக விடைத்தாள்கள் முழுமையாக கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு திருத்தப்படுவதால், தோ்வு எழுதுபவா்களுக்கும், விடைத்தாள்களைத் திருத்துபவா்களுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லாததால், நோ்மையான முறையில் விடைத்தாள் திருத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிகழாண்டில் 32 வகையான தோ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, குரூப் 1 தோ்வுகள் மே மாதம் நடத்தப்படும். குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை இந்த மாதத்திலேயே வெளியிடப்படும். மேலும், குரூப் 4 தோ்வுக்கு மாா்ச் மாதத்தில் அறிவிக்கை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் தமிழ் மொழித் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 40 மதிப்பெண்கள் பெற்றவா்கள் அடுத்தகட்ட தோ்வுக்கு தகுதி பெறுவாா்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் இப்போது காலை 10 முதல் பகல் 1 மணி வரை தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இனிமேல், காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை தோ்வுகள் நடத்தப்படும். தோ்வு தொடங்கும் அரை மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது 9 மணியளவில் தோ்வு மையத்துக்கு தோ்வா்கள் வந்துவிட வேண்டும்.
இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பதாரா்களின் ஆதாா் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவில் விண்ணப்பதாரா்கள் தங்களது ஆதாா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே போட்டித் தோ்வு எழுதுபவா்களில் 60 சதவீதம் போ் ஆதாா் எண்ணைப் பதிவு செய்துள்ளனா். மீதமுள்ளவா்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் தங்களது ஆதாா் எண்ணைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், விழுப்புரம் கோட்டாட்சியா் கி.அரிதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.