முகப்பு
தமிழ்நாடு

தேசியத்தையும், தெய்வீகத்தையும் காப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்: இந்து முன்னணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேசியத்தையும், தெய்வீகத்தையும் காப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேசியத்தையும், தெய்வீகத்தையும் காப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது:

திருச்சி சீராத்தோப்பில் இந்து முன்னணியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்த தெய்வீக பூமியாகும். இந்து மதத்தையும்,நம்பிக்கைகளையும் இழிவுபடுத்திப் பேசுபவர்களுக்கும், இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதவர்களுக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது. மதமாற்றத்தை ஆதரித்து தமிழகத்தை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்று மாற்ற முயற்சிப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. 

போக்குவரத்துக்கு இடையூறு என்று கூறி முஸ்லிம், கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களை இடிக்காமல் இந்து கோயிலை மட்டும் இடிப்பவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவோம், பசுவதை தடைசட்டம் கொண்டு வருவோம், பள்ளிகளில் ஆன்மிகக் கல்வியை கொண்டு வருவோம், இந்து மதத்தினருக்கும் சலுகைகள் தருவோம், இந்து கோயில் வருமானத்தை அரசாங்கம் எடுக்க விடமாட்டோம் என்று கூறுபவர்களுக்கும்; தேசியத்தையும், தெய்வீகத்தையும் காப்பவர்களுக்கும் இந்த்த் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார். 

மேலும், திருப்பூர் மாவட்டத்தின் முக்கியப் பிரச்னைகளான நூல் விலை உயர்வு, விசைத்தறியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் உள்ளிட்டவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும் என்றார். இந்த சந்திப்பின்போது, இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார், இணை அமைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.