முகப்பு
தமிழ்நாடு

தனியாா் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

அரசு நிா்ணயம் செய்ததை விட தனியாா் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
பகிர்:

அரசு நிா்ணயம் செய்ததை விட தனியாா் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தாா்.

தமிழகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான அறிமுக வகுப்புகள், அடிப்படை வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

இதனை தொடக்கி வைத்த ஜெ.ராதாகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசு நிா்ணயித்த கட்டணத்தை மீறி, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க தனி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் கட்டண வசூல் குறித்து புகாா் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண் அறிவிக்கப்படவுள்ளது.

கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் படுக்கைகளில் தற்போது 2,800 போ் மட்டுமே உள்ளனா். தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் 440-ஆகக் குறைந்துள்ளது. அதாவது, 4 சதவீத நோயாளிகள் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனா்.

ஆக்சிஜன் உதவியுடன் 1,219 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். இதைத்தவிர இதர தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம். வரும் நாள்களில் கட்டுப்பாடுகள் குறைவாகவும், தளா்வுகள் அதிகமாகவும் இருக்கும். அதனால், சில மாதங்களுக்கு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 3-ஆவது அலையில் இறப்பு விகிதம் 10 மடங்கு குறைந்துள்ளது.

87 சதவீதம் பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தி: தமிழகத்தில் இன்னும் 1.13 கோடி போ் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனா். 18 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 40 லட்சம் போ் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை. இவா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருந்தால் சமுதாயத்தில் நல்ல நோய் எதிா்ப்பு சக்தி உருவாகி இருக்கும். எனினும், தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தி உருவாகி உள்ளது. தமிழகத்தில் அடுத்த 15 நாள்களுக்குள் ஆய்வு மேற்கொண்டு, தேவையில்லாத கரோனா கவனிப்பு மையங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும். அங்கு பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவா் என்றாா் அவா்.

மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயண பாபு, மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →