திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்து தடை தொடரும்: உயர்நீதிமன்றம்
திம்பம் மலைப்பாதை வழியாக இரவுநேரத்தில் வாகனம் செல்ல விதிக்கப்பட்ட தடைத் தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரத்தில் வாகனம் செல்ல விதிக்கப்பட்ட தடைத் தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வதால் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதால், வாகனங்களுக்கு தடை விதித்து 2019ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த உத்தரவு அமல்படுத்தவில்லை.
இந்நிலையில், போக்குவரத்திற்கு விதித்த தடையை முறையாக பின்பற்ற உத்தரவிடக் கோரி கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈரோடு ஆட்சியர் விதித்த தடையை முறையாக பின்பற்ற வேண்டும் என வனத்துறைக்கு அறிவுறுத்தினர். மேலும், பிப்ரவரி 10ஆம் தேதிமுதல் திம்பம் மலைப்பாதை வழியாக மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை வாகனப் போக்குவரத்திற்கு உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் சுற்றியுள்ள வியாபாரிகள், வாகன ஓட்டிகள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த ஒரு வாரமாக தடையை நீக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் பாதிக்கப்படுவதால் தடையை நீக்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு அளித்திருந்தார்.
இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் விதித்துள்ள தடை உத்தராவை திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சரணாலய பகுதியில் உள்ள கிராம மக்கள் சிரமப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவித்த நிலையில், கிராம மக்களை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் அல்லது சரணாலயமாக அறிவியுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஒருவாரத்திற்கு பிறகு அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்தனர்.