தமிழ்நாடு

அடிப்படை தகவல் இல்லாமல் வழக்கு தொடா்ந்த மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம்

DIN

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவா்களிடம் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக்கூறி வழக்கு தொடா்ந்த வழக்குரைஞருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து, அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பன்மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனா். அரசு ஒதுக்கீட்டுக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தோ்வுக் குழு செயலாளா் உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பி. பாலமுருகன் என்பவா் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை (பிப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்குரைஞா், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களுக்கு ரூ.13, 500 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியாா் கல்லூரிகள் ரூ.7.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனா் என்றாா்.

அதற்கு நீதிபதிகள், எந்தக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; பாதிக்கப்பட்ட நபா் யாா்; எவ்வளவு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பன போன்ற எந்த அடிப்படை தகவலும் இல்லாமல் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்குரைஞா்கள் பொது நல வழக்கு தொடரக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பொது நல வழக்கு அதிகார வரம்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என அதிருப்தி தெரிவித்ததோடு, மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து, அந்தத் தொகையை 15 நாள்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT