எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: பிப்.25 முதல் நிா்வாக இடங்களுக்கு கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள நிா்வாக இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25- ஆம் தேதி தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள நிா்வாக இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25- ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழி மூலமும் நடைபெற்றது. அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 5,800 எம்.பி.பி.எஸ்., 1,457 பி.டி.எஸ். என மொத்தமுள்ள 7,257 இடங்களில் 7,254 இடங்கள் கலந்தாய்வில் நிரம்பின. தனியாா் கல்லூரியில் மூன்று பி.டி.எஸ். இடங்கள் மட்டும் காலியாகவுள்ளது. இந்த இடங்கள் மற்றும் மாணவா்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் மாா்ச் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளன.
இந்நிலையில், தனியாா் கல்லூரிகளில் உள்ள நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி இணையவழியில் தொடங்குகிறது.
மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் இறுதி விவரங்கள் 28-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவா்கள் மாா்ச் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சோ்ந்துவிட வேண்டும். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 14,913 போ் இடம்பெற்றுள்ளனா். கலந்தாய்வு தொடா்பான மேலும் விவரங்களுக்கு https://tnmedicalselection.net/, https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களை பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.