கும்பகோணம்: கும்பகோணம் அருகே சூரியனார் கோயில் ஆதீனம் 27-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (102) திங்கள்கிழமை முற்பகல் 11 மணியளவில் பரிபூரணம் அடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாட்சி புரிந்து வந்தார்.
இதையும் படிக்க.. நல்ல செய்தி: குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர வாய்ப்பு?
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடங்குளம் கிராமத்தில் பிறந்த இவர், இளமையிலேயே இறை வழிபாட்டில் நாட்டம் கொண்டு, திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகள் ஒருவராக இருந்து மெய்கண்டாரின் முக்தித் தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் சிறப்பாகச் சேவை புரிந்தார்.
அதன் பின்னர், திருவாவடுதுறை 23-ஆவது சன்னிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்யா சுவாமிகளிடம் மந்திர கஷாயம் பெற்று சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கே, ஆதீன கர்த்தர் தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததையொட்டி 27-ஆவது பட்டம் பெற்று, முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆதீன கர்த்தராக அருளாட்சி செய்து வந்தார்.
சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு தமது அருள் ஆட்சி காலத்தில் பல்வேறு பணிகளை மடத்தில் மேற்கொண்டார். பழமையான கோயில்களைப் புதுப்பித்து திருப்பணி செய்வதற்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
குருமகா சன்னிதானம் 102 வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை முற்பகல் 11 மணி அளவில் சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்.
சூரியனார் கோயில் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.