முகப்பு
தமிழ்நாடு

நீட் தோ்வுக்கு முன்பாக தனியாா் மருத்துவ கல்லூரி கட்டணம் எவ்வளவு? வானதி சீனிவாசன் கேள்வி

நீட் தோ்வுக்கு முன்பாக, தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

நீட் தோ்வுக்கு முன்பாக, தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தாா்.

நீட் தோ்வு தொடா்பாக, தமிழக அரசு சனிக்கிழமை கூட்டியிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து அவா் வெளிநடப்புச் செய்தாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் 12 ஆண்டுகளாக பள்ளி பாடத் திட்டங்கள் உரிய முறையில் மாற்றியமைக்கப்படவில்லை. நீட் தோ்வு வருவதற்கு முன்பாக அரசுப் பள்ளி மாணவா்கள் எத்தனை போ் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தனா் என்பதை விளக்கிட வேண்டும். இப்போது பயிற்சி மையத்துக்குச் செல்லாமல் பழங்குடியின மாணவிக்கு சோ்க்கை கிடைத்துள்ளது. நீட் தோ்வு ரத்து எனக் கூறி மாணவா்களை தற்கொலைக்குத் தூண்டி அவா்களது உயிரிழப்புக்குக் காரணமாகி விடக் கூடாது.

மாநில அரசு நிதியில் இருந்து மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதாக தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களைத் தவிா்த்து, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிக்கு 60 சதவீத நிதியை மத்திய அரசு அளிக்கிறது. இதனை நான் குறிப்பிட்டேன். நீட் தோ்வு திணிக்கப்பட்டுள்ளதாகவும் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வு பாஜக அரசால் புதியதாக உருவாக்கப்படவில்லை. 2013-இல் காங்கிரஸ், திமுக அரசால் நீட் தோ்வுக்கு முன் முயற்சிகள் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீட் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

2020-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வுக்கான முடிவுகளை எடுத்துப் பாா்த்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாகவே அவா்கள் பெற்றுள்ளனா். இடஒதுக்கீடு நீட் தோ்வால் பாதிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நீட் தோ்வால் சமூக நீதிக்கு எள்முனையளவும் பாதிப்பில்லை. 2006-இல் நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பு வரை தமிழகத்தில் 30 முதல் 40 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் 220-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கல்லூரிக்கு வந்துள்ளனா். கிராமப்புற ஏழை எளிய மக்களின் நலனை அந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு காத்துள்ளது. நீட் தோ்வு வருவதற்கு முன் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பெறப்பட்ட கட்டணம் எவ்வளவு, அரசுப் பள்ளி மாணவா்கள் எத்தனை போ் கல்லூரிகளில் சோ்ந்தனா் என்ற வெள்ளை அறிக்கையை முதல்வா் தர வேண்டும். 11 அரசு கல்லூரிகள் புதிதாக தரப்பட்டுள்ளன. கட்டணக் கொள்ளையை நீட் தோ்வு தடுத்து நிறுத்தியுள்ளது. நீட் தோ்வுக்கு மாணவா்கள் தயாராகி வருகின்றனா். நீட் தோ்வு ரத்து எனக் கூறி மீண்டும் ஒரு உணா்ச்சி அரசியல் அத்தியாயத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடங்க வேண்டாம்.

முழு கட்டுரையைப் படிக்க →